 |
டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள்
புரவலர் & தலைவர்,
தமிழ் இசைச் சங்கம்,
மதுரை- 625 020
|
செப்டம்பர் திங்கள் 30 ஆம் நாள் செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர் மு.அ.முத்தையா செட்டியார் - ராணி லேடி மெய்யம்மை ஆச்சி க்கு இரண்டாவது புதல்வராக 30.09.1931 ஆம் ஆண்டு பிறந்தார்
சென்னை பல்கலைக்கழகத்தின் புகழ் மிக்க விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றார். கல்லூரி வாழ்க்கையில் நன்மாணவராகத் திகழ்ந்ததோடு மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
பட்டப்படிப்பு முடித்தவுடன் தனது தகப்பனார், பாட்டனார் வழிமுறையில் வந்த தொழில் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார்.வளர்ந்து வரும் ஓங்குபுகழ் நிறுவனமாம் செட்டிநாடு சிமிண்ட் கார்ப்பரேசனின் இயக்குனராக 1962 ல் நியமிக்கப்பட்டார்.நிறுவனத்தின் இணை இயக்குனராக பொறுப்பேற்று திறம்படச் செயல்பட்டார்.பின் இயக்குனராகவும், தென்னிந்திய கட்டுமானக் கழகத்தின் தலைவராகவும், மதுரா கோட்ஸ் நிறுவனம், கன்சாலிட்டேட்டட் காபி நிறுவனம்,செட்டிநாடு கிரானைட் நிறுவனம்,அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் & எண்டர்பிரைசஸ் லிட், விஜயா கமர்சியல் கிரடிட் பி.லிட், மணிபால் இண்டஸ்ட்ரிஸ், ஆகிய நிறுவனங்களில் இயக்குனராகவும், மற்றும் பல நிறுவனங்களில் இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு பெருமைமிகு சங்கமாம் தென் இந்திய தொழில் வர்த்தக சங்கம் வைர விழா ஆண்டில் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசின் திட்டக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பல்வேறு துறைகளில் செய்த சாதனைகளைக் கண்டு தமிழக அரசு சென்னை மாநகர மக்களின் முன்னேற்றத்திற்கு பல வகையில் உறுதுணையாக இருந்த எம்.ஏ.எம்.இராமசாமி அவர்களின் பொது நலத் தொண்டைப் பாராட்டி 1971 ஆம் ஆண்டிலும், 1974 ஆம் ஆண்டிலும் சென்னை மாநகர ஷெரிப் பதவியை வழங்கி கெளரவித்தது.
இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக 1974 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு,,கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தங்க பதக்கமும், துணைத் தலைவராக இருந்த போது 1980 ல் மாஸ்கோவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் தங்க பதக்கமும் இந்திய ஹாக்கி அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாட்மிண்டன் அசோசியேசன் புரவலராகவும்,தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் புரவலராகவும்,தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆகியவற்றிலும் பதவி வகித்தவர்.மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் தலைவர்,.இவர் குதிரைப் பந்தயத்தில் 500 போட்டிகளுக்கு மேல் தொடர்ந்து வெற்றி பெற்று 545 கிளாசிக் ரேஸில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
1976 ஆம் ஆண்டு சென்னையின் தலைச்சிறந்த அறக்கட்டளைகளில்
ஒன்றான பச்சையப்பா டிரஸ்டின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.1984 ஆம் ஆண்டு ஜீன் 8 ஆம் தேதி பெருமைமிகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தராக பொறுப்பேற்ற பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு புதிய துறைகளை அறிமுகப்படுத்தி தம் தந்தையின் கனவான ஏழை ,எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்வதற்கு மருத்துவ கல்லூரி ஒன்றையும் ஏற்படுத்தினார்கள். இம் மருத்துவமனைதான் இந்தியவிலேயே அதிக படுக்கை கொண்ட ஒரு சிறந்த மருத்துவமனையாக செயல்படுகிறது.இவரின் வழிகாட்டுதலின் படி பல்கலைக் கழகத்தின் தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் நூற்றுக்கணக்கான தொழில் சார்ந்த டிப்ளமோ, மற்றும் பட்டப் படிப்புகளையும் எல்லா மாநிலங்களிலும் தொடங்கினார்.
இவ்வுயர் குடும்பத்தின் இன்றைய அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள் தம் தந்தையாரால் நிறுவப்பெற்ற ஏழு அறக்கட்டளைகளான ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை,ராஜா சர் முத்தையா செட்டியார் கல்வி,நிதி அறக்கட்டளை,ராணி மெய்யம்மை ஆச்சி செட்டிநாடு அறக்கட்டளை,கரூர் அறக்கட்டளை,இந்தியப் பண்பாட்டு அறக்கட்டளை,தமிழ்நாடு கல்வி நிதி அறக்கட்டளை,வெலிங்டன் அறக்கட்டளைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விழா எடுத்து,ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு, உதவித் தொகையும், இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், மதுரை தமிழ் இசைச் சங்கம் மூலமாக விருதும்,தமிழறிஞர்களை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிஞர்களுக்கு பொற்கிழியும், முத்தமிழ் பேரறிஞர் பட்டமும், அதனுடன் பதக்கமும் அணிவித்து கெளரவித்து வருகின்றார்.
தொழில், கல்வி, விளையாட்டுத்துறை, இவற்றில் பெற்றுள்ள அனுபவத்தால் நம் நாட்டு வளர்ச்சிக்கும், தமிழ் இசை வளர்ச்சிக்கும்,இவர்கள் ஆற்றி வரும் அரும்பணிகளை நாடறியும்.டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள் உயர்ந்த நோக்கங்கள் கொண்டு வள்ளுவர் கூறியுள்ள அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம்,போன்ற பண்புகளால் சிறந்து விளங்குகிறார்.
1979 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் “ கெளரவ டாக்டர்” பட்டமும், 1996 ல் அழகப்பா பல்கலைக் கழகமும், 2001 ல் அண்ணா பல்கலைக் கழகமும், 2002 ல் புதுச்சேரி மையப் பல்கலைக் கழகமும், 2011 ல் தமிழ் நாடு உடற்கல்வி,மற்றும், விளையாட்டுப் பல்கலைக் கழகமும் “கெளரவ டாக்டர்” பட்டமும் வழங்கி கெளரவித்தன.
2004 ஆம் ஆண்டு “பரமாச்சாரியார் வாழ்நாள் சாதனையாளர் விருது” 2005 ல் சென்னை ரோட்டரி சங்கத்தின் “சேவைச் செம்மல் விருது” கோவை கே.ஜி.பவுண்டேசனின் “பத்தாண்டுகளின் மா மனிதர்”பட்டம்,ரோட்டரி சங்கத்தின் “வாழ் நாள் சாதனையாளர் விருது” ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.
2004 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்திலிருந்து “ராஜ்ய சபா” உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.உழைப்பு,சேமிப்பு,தொண்டு, என்ற முப்பெரும் குறிக்கோளுடன் கலை நோக்கம் கொண்டு தமிழர்கள் தலைதூக்க கலைக்கழகம் கண்ட பரம்பரையில் தோன்றியவர் டாக்டர் எம்.ஏ.எம்.
இவர் ஒரு சிறந்த ஆன்மீக வாதி.அய்யப்ப பக்தர்.இவரின் பக்தியின் காரணமாக சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் அய்யப்பன் கோவிலை கட்டியுள்ளார்.இவர் எளிமையாகவும்,இனிமையாகவும்,பழகுவதோடு ,பொது வாழ்க்கை,ஆழ்ந்த அறிவுத்திறன்,உறுதியான உள்ளமும்,ஊக்கமும்,உண்மையான உழைப்பும்,விடா முயற்சியும்,நாணயமான போக்கும்,அருள் நோக்கும்,அறச்சிந்தனையும் விளையாட்டு,கலை,ஆர்வமும், ஒருங்கே அமையப்பெற்று வாழும் பண்பாளர் டாக்டர்.எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள்.