எங்களைப்பற்றி

     மதுரை தமிழ் இசைச் சங்கம் 1974 ஆம் ஆண்டு மதுரையில் தமிழ் இசைக்கென ஒரு சங்கம் உருவாகியது.தமிழ் மொழி தொன்மையானது.பாண்டிய மன்னர்களால் முதல்,இடை,கடை என்னும் முச்சங்கங்களினால் இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழ் ,இலக்கணத்தோடு வளர்க்கப்பட்டது.

     “தமிழ்நிலை கெழி இய தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை”என்ற சிறுபாணாற்றுப் படையில் சொல்லப்பட்டு இருக்கின்றது.தமிழ் நிலை என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்ச் சங்கம் இருந்து,தமிழ் இலக்கியத்தை ஆய்ந்து,வளர்த்த,மதுரைத் தென்னகரில் 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இசை வளர்க்க தமிழ் இசை சங்கம் தோற்றுவிக்க எண்ணி 21.01.1974 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் மதுரையில் சங்கம் தோற்றுவித்த வள்ளல் அரசர் முத்தையவேள் அவர்களுடைய தனித்தமிழ் தொண்டு பாராட்டுக்குரியது.

     சிறப்புபெற்ற மாமதுரையில் தமிழ் இசைக் காவலர்,டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் தமிழ் இசைச் சங்கம் நிறுவி,தமிழுக்கும்,தமிழ் மொழிக்கும்,தமிழ் இசைக்கும்,கலையழகு மிகுந்த அரண்மனை போன்ற கட்டிடம் கட்டியுள்ளார்.மதுரை நகரினுள் நுழைவோரின் கண்ணைக் கவர்ந்து ,இழுக்கும் வண்ணம்,பண்டைத் தமிழரின் சிற்ப சாத்திரத்தின்படியும்,உட்புற அமைப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கலை எழில் தவழும் கவின்பெறு மாளிகையாக அமைந்துள்ளது.

     தமிழ் இசைச் சங்கத்தில் சிறந்த மேடை அமைப்புடன் கிழக்கு நோக்கி அமையப்பெற்றது.இம் மன்றத்தில் தமிழ் இசைக்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் தவிர மற்ற தினங்களில் ,, கருத்தரங்குகள்,கல்விக் கண்காட்சி,பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள், நடத்த அனுமதி அளிக்கப்படுகின்றது.தமிழ் இசைச் சங்கத்தில் மாதாந்தோறும் இரண்டு நிகழ்ச்சிகளும்,அரசர் அவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் ஆண்டு தோறும் 10 நாட்கள் இசை விழா என நாங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இலவசமாகவே நடத்துகின்றோம்.

     தமிழ் இசை சங்கத்தில் தமிழ் இசை வளர்க்கும் நோக்கில் தேவாரத் திருமுறைகள்,பயிற்றுவிக்க தேவார இசைப் பள்ளியை தொடங்க எண்ணி, 14.04.1992 ஆம் தேதி தமிழ் வருடப் பிறப்பு அன்று தேவார இசைப் பள்ளியை தொடங்கி இன்று வரை இலவசமாக தேவாரத் திருமுறைகள் கற்றுத்தரப்படுகிறது.இப் பயிற்சிப் பள்ளியில் வாரத்திற்கு மூன்று நாட்கள் வகுப்புகள் இயங்குகின்றன.

     தமிழ் இசை சங்கத்தின் அடுத்த மைல் கல்லாக இசைக்கொரு கல்லூரி தொடங்க எண்ணி ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரியையும் 2012 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தொலைதூரக்கல்வி மூலம் இசை, நடனம், வீணை, வயலின், மிருதங்கம்,போன்ற கலைகளை பயிற்றுவித்து வருகின்றது.

     தமிழ் இசை சங்கம் இசையோடு நின்றுவிடாமல் மருத்துவத் துறையிலும் ,முத்திரைப் பதித்து 2006 ஆம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையின் குழந்தைகள் நலப்பிரிவு, மற்றும் ஆராய்ச்சி மையத்தை தத்தெடுத்து இன்றுவரை பராமரித்து வருகின்றது.