தமிழ் இசைச் சங்கம் வரலாறு

     தமிழை முத்தமிழாகப் பிரித்து இயல்,இசை,நாடகம் என்ற பிரிவுகளிலே,இலக்கணத்தையும்,இலக்கியத்தையும்,உலகிற்கு இசை நுணுக்கங்களையும் சிறப்பாக காட்டியது மாமதுரையாகும்.இந்நாள் வரை தமிழிசையின் அடிப்படையான பண்ணிசை,அழிந்து விடாமல் உள்ள உரத்தோடு காப்பாற்றி வருபவர்கள் ஓதுவா மூர்த்திகள் என்றால் மிகையாகாது.

     விழித்தெழுந்த தமிழ்ச் சமுதாயம் “செந்தமிழ் இசை பாடல் இல்லையென சொல்பவன் தமிழனா” என்ற புரட்சிக் கவிஞர் உரைகளில் திளைத்து “தேமதுரத் தமிழோசையினை உலகமெல்லாம் பரப்ப வேண்டும்” என்ற பாரதியின் உணர்வினைப் பெற்று ,தமிழிசைக்கு ஆக்கத்தைச் சேர்த்த ,தமிழ் வளர்த்த சான்றோர்கள் வரிசையில் டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களும்,டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களும் அவர் தம் குடும்பத்தாரும் தலையாய இடத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

     நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தருக்குப் பிறகு “சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் - தமிழோடு இசைப் பாடல் மறந்தறியேன்” என்ற திருநாவுக்கரசருக்குப் பிறகு சுந்தரத் தமிழிலே பாடி இறைவனையே சொக்க வைத்த ,சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிறகு தமிழ் உணர்வு உள்ளவர்களோடு சேர்ந்து,அரசர் அண்ணாமலையார்,அரசர் முத்தையவேள்,டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி ,குமார ராணி மீனா முத்தையா மற்றும் அவர்தம் குடும்பத்தார்கள் ஆகிய பெருந்தகையாளர்கள் தமிழிசையை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் இசைச் சங்கம் இசை உலகில் ஒரு புதிய கலங்கரை விளக்கமாகத் தோன்றி ,ஒரு புதிய பாதையையும் காட்டிக் கொடுத்துள்ளது. இசையின் இனிமையைத் தமிழின் அழகோடு சேர்த்து வழங்குவதுதான் தமிழிசை.வளம் நிறைந்த தமிழ் இசைக்கு சில கால கட்டங்களில் நாயன்மார்களும்,ஆழ்வார்களும் தோன்றி ,மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள்.தங்களின் பக்தி ததும்பிய பாடல்களின் வாயிலாக தமிழ் இசைக்கு ஒரு புதிய வடிவத்தை வழங்கி ,இசையையும்,இறைவனையும்,ஒன்றாகவே கண்டார்கள்.அதனால் தான் இறைவனை “ஏழிசையாய் இசைப் பயனாய்” என்றும்,ஓசை ஒளியெல்லாம் ஆனாய் நீயே என்று பாடினார்கள்.தமிழிசை உணர்வு உடையவர்கள் ,தமிழிசையை பரப்ப வேண்டும்.சிறிது காலத்திற்கு முன் வரை தமிழிலே இசை இருக்கின்றதா என்று கேட்டார்கள் தமிழர்கள்.இதை கேட்ட பாரதிதாசன் கூட “மானமின்றி நம்முடைய தமிழிலே இசை இல்லை என்று சொல்லுகின்றீர்களே தாய்க்கு உடை இல்லை என்று சொல்வாருண்டோ” என்று கேட்டார்கள்.பாரதியார் தேமதுரத் தமிழோசை உலகம் எல்லாம் பரப்ப வேண்டும் என்றும்,பண்ணின் (பாட்டினுடைய பெருமைகளை எடுத்துக் கூறுவாரில்லை) திறத்தாலே இவ்வையகத்தை பாலித்திட வேண்டும் என்றும் பாடினார்கள்.அவர்களின் பாட்டினுடைய பெருமைகளை எடுத்து கூறுவாரில்லை.ஒலியிசை காதோடுதான் நிற்கும்.ஒலியின் அலைகளோடு பொருள் செறிந்த பாடல்களாய் இருந்தால் அது உள்ளத்திலே கிளர்ச்சியை உண்டாக்கி,உத்தம மனிதராக மாற்றி,உள்ளத்தை ஈர்க்கும் சக்தியுடையது தமிழிசை.

     தமிழ் மொழி தொன்மையானது.பாண்டிய மன்னர்களால் முதல்,இடை,கடை என்னும் முச்சங்கங்களினால் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணத்தோடு வளர்க்கப் பட்டது.தமிழ் நிலை என்று குறிப்பிடப்பட்ட தமிழ் சங்கம் இருந்து,தமிழ் இலக்கியத்தை ஆய்ந்து ,வளர்த்த மதுரை தென்னகரில் 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இசை வளர்க்க மதுரையில் தமிழ் இசைச் சங்கம் தோற்றுவித்த வள்ளல் ,அரசர் முத்தையவேள் அவர்களுடைய தனித்தமிழ் தொண்டு பாரட்டுக்குரியது.

     மதுரையின் சிறப்பைச் சொல்ல எத்தனையோ இலக்கியங்கள் இருக்கின்றன.சங்க இலக்கியங்களிலே மதுரைக் காஞ்சி என்ற இலக்கியம் மதுரையை வருணிப்பதற்கென்றே படைக்கப் பட்டது.மதுரையை சுற்றி வந்தால் நான் மாடக் கூடலும் மீனாட்சி சொக்கேசர் கோவில் கோபுரங்களும் வானுயர நிற்பதைக் காணலாம்.அருள்மிகு மீனாட்சி சொக்கேசரால் இம் மதுரை மேலும் சிறப்படைகிறது.மதுரை - மீனாட்சிக்கு சொந்த ஊர்.சொக்கேசர் , மீனாட்சியை திருமணம் செய்து கொண்ட ஊர்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இம்மாமதுரையில் வள்ளல் ,தமிழிசைக் காவலர் ,டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களின் சீரிய முயற்சியால் மதுரை தமிழ் இசைச் சங்கம் 21.01.1974 ஆம் ஆண்டு மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தலைமையில் ,தமிழ்வேள் பி.டி.ராசனார் அவர்கள் தமிழ் இசைச் சங்கத்தை தமது திருக்கரத்தாலும்,தூய எண்ணத்தாலும் தமிழிசை வளர்ச்சியின் ஆர்வத்தோடு துவக்கி வைத்தார்கள்.வணக்கத்திற்க்குரிய மதுரை மாநகர முதல் மேயர் செயல் வீரர் எஸ்.முத்து அவர்களால் முதல் தமிழ் இசை விழா இனிதே தொடங்கி வைக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக இணை வேந்தர் டாக்டர் ராஜா சர் முத்தையவேள் அவர்கள் சிறப்புரை ஆற்றி பெருமை சேர்த்தார்கள்.

     தமிழ் இசைச் சங்கத்திற்க்கு மதுரையில் தனியாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்ற அரசர் முத்தையவேள் அவர்களின் தனியான ஆர்வத்தை நிறைவேற்றும் எண்ணத்துடன் அன்றைய தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மதுரை மேலூர் சாலையில் தமிழ் இசை சங்கத்திற்க்கு , சென்னை உயர் நீதி மன்றத்திற்கு எதிரேயுள்ள ராஜா அண்ணாமலை மன்றம் போல உயர்ந்து வளர மதுரை நீதி மன்றத்திற்கு எதிரே தமிழ் இசைச் சங்கத்திற்கு நீதி தேவைப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிலத்தை நன்கொடையாக பேரூஉவகையோடு வழங்கி மதுரைக்கு பெருமை சேர்த்தார்கள்.அப் பெரு நிலத்தில் 24.04.1975 ஆம் ஆண்டு தமிழக சட்டம்,மற்றும் உணவு அமைச்சர் செ.மாதவன் அவர்களின் சீர்மிகு தலைமையில் தமிழக முதல்வர் ,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தனது ராசியான திருக்கரங்களால் தமிழ் இசைச் சங்க கட்டிடத்திற்கு கால்கோள் விழா செய்து கூடல் நகரமாம் மாமதுரைக்கு மற்றும் ஓர் பெருமை சேர்த்தார்கள்.அரசர் முத்தையவேள் அவர்கள் “ராஜா முத்தையா மன்றம்” எனும் எழில் மிகு இசை அரங்கத்தை நவீன முறையில் அரண்மனை போன்று கட்டிக் கொடுத்து மாமதுரைக்கு மற்றுமோர் பெருமை சேர்த்தார்கள்.

     29.04.1979 ஆம் ஆண்டு தமிழக மேலவைத் தலைவர் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி.அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்கள் இசை விழாவினைத் தொடங்கி வைத்து பத்மபூசன் டாக்டர் முத்தையவேள் அவர்களுக்கு தனது தங்க கரத்தால் “தமிழ் இசைக் காவலர்” என்ற பட்டத்தையும், அதற்குரிய தங்க பதக்கத்தையும் அணிவித்து பெருமை சேர்த்தார்கள்.

     1986 ஆம் ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள் பண்பின் சிகரமாக தனது அருமை தந்தையார் டாக்டர் ராஜா சர் முத்தையவேள் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ் இசைச் சங்கத்தை கண்ணும் கருத்துமாக காத்து வளர்த்து வருவதோடு தன் அருமை தாயார் ராணி மெய்யம்மை ஆச்சி அவர்களின் நினைவாக ராணி மெய்யம்மை மன்றத்தை 16.06.1998 அன்று தோற்றுவித்தார்கள்.1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் நாள் மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் பொன் நாள் ஆகும். மாண்புமிகு பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ் இசைச் சங்கம் நிறுவிய பெருமகனார் தமிழ் இசைக் காவலர் டாக்டர் ராஜா சர் முத்தையவேள் அவர்களின் நெடியுயர்ந்த கம்பீரமான உருவச் சிலையை திறந்து வைத்து அரசர் அவர்கள் குடும்பத்தை பெருமைப் படுத்தினார்கள்.

     தமிழக முதல்வர்கள் டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள், புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள், உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள்,முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்கள்,மேதகு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், மேதகு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் ,தமிழக ஆளுனர்கள் ஆகிய பிரமுகர்கள் தமிழ் இசைச் சங்கத்திற்கு வருகை புரிந்து பெருமைப் படுத்தி உள்ளார்கள்.

     தமிழ் இசைச் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டில் 09.02.2000 ஆம் தேதி அன்று புரவலர் டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள் தம் அன்பு சகோதரர் குமார ராஜா முத்தையா அவர்கள் நினைவாக குமார ராஜா முத்தையா மன்றம் என்ற கலை அழகு மிகுந்த கட்டிடத்தை தோற்றுவித்து மறைந்த தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மாண்புமிகு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களுடைய திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

     1992 ஆம் ஆண்டு முதல் தமிழ் இசைச் சங்கத்தில் தேவார இசை வகுப்பு துவக்கப்பட்டு தேவாரத் திருமுறைகள் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.தேவாரத் திருமுறைகள் பயின்று இதுவரை சுமார் 2000 நபர்களுக்கு மேல் திருமுறைத் தேர்வு எழுதி “திருமுறைச் செல்வம்” எனும் பட்டம் பெற்று இருக்கிறார்கள்.திருமுறைச் செல்வம் பட்டம் பெற்றவர்கள் பொது இசை நிகழ்ச்சிகளிலும்,ஆலயங்களிலும், பங்கு பெற்று தேவார இசையை பண்,இராகத்தோடு, பாடி பெருமை சேர்த்து வருகிறார்கள்.

     1995 ஆம் ஆண்டு முதல் தமிழ் இசைச் சங்கத்தில் வீணை,வயலின், மிருதங்கம்,பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, போன்ற இசைப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

     1995 ஆம் ஆண்டு முதல் முத்தமிழில் சிறந்து விளங்குகின்ற பெரியார்களை தேர்ந்தெடுத்து “முத்தமிழ் பேரறிஞர்” என்ற பட்டமும்,தங்கப் பதக்கமும், பொற்கிழி ரூபாய் 50,000/- மும் வழங்கி பெருமை சேர்த்து வருகிறது.