ஏப்ரல் 2000 ஆம் ஆண்டு முதல் மதுரை தமிழ் இசைச் சங்கம் சிறப்புக் கலைப் பிரிவைத் தோற்றுவித்து மாதாந்திர நிகழ்ச்சிகளை இசை ஆர்வமிகு மதுரை மக்களுக்கு மாதாந்தோறும் இரண்டு நிகழ்ச்சிகள் இலவசமாக சிறப்பாக வழங்கி வருகிறது.இதன் மூலம் வளரும் இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
2001 ஆம் ஆண்டு முதல் அரசர் டாக்டர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் பிறந்த செப்டம்பர் 30 ஆம் தேதியும், தமிழிசைக்காவலர் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் பிறந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியும் தமிழ் வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் அரசர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் சிறந்த தமிழ் இசைக் கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா ரூபாய் 25,000/- மும் வழங்கி கெளரவித்து வருகிறது.
தமிழ் இசை சங்கத்தின் சீரிய பணியைப் பாராட்டி தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைச்சிறந்த கலை நிறுவனமாக மதுரை தமிழ் இசைச் சங்கத்தை தேர்ந்தெடுத்து கேடயம் வழங்கி சிறப்பித்துள்ளது.
தமிழ் இசைச் சங்கம் இசைத் துறையில் மட்டுமின்றி மருத்துவம், சார்ந்த துறையிலும்,கால் பதித்து அரசர் டாக்டர் முத்தையவேள் அவர்களின் நூற்றாண்டு விழாவில் 2004 ஆம் ஆண்டு ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையுடனும், அரவிந்த் கண் மருத்துவமனையுடனும் இணைந்து தமிழ் இசைச் சங்கம் மிகப் பிரமாண்டமான முறையில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது.இம் மருத்துவ முகாமில் சுமார் 2500 நபர் வரை பங்கு பெற்று பயன் அடைந்தனர்.5 ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சையும், சுமார் 250 நபர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்து தமிழ் இசைச் சங்கம் சாதனை புரிந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் மதுரை தமிழ் இசைச் சங்கம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு மற்றும் ஆராய்ச்சி மையத்தை தத்தெடுத்து ரூபாய் 15,00,000/- செலவில் புதிதாக இரண்டு அதி நவீன அவசர சிகிச்சைப் பிரிவை குளிர் சாதன வசதியுடன் தனியார் மருத்துவ மனைக்கு நிகராக மாற்றிக் கொடுத்துள்ளது.புதிதாக ஆழ்துளை கிணறு குழாய்களையும் அமைத்துக் கொடுத்து அதன் மூலம் குழந்தைகள் பிரிவிற்கு புதிதாக தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை இலவசமாக வழங்கி உள்ளது. இதற்கு மதுரை தமிழ் இசைச் சங்கம் ஊழியர்களை புதிதாக நியமித்து குழந்தைகள் நலப் பிரிவை சிறப்பாக பராமரித்து வருகிறது.
2008 ஆம் ஆண்டு தேவார இசையை பரப்பும் எண்ணத்தோடு முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழனியில் தேவரப் பாடசாலை கட்டிக்கொடுத்து 08.02.2009 ஆம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டு அர்ப்பணிக்கப் பட்டது.
மதுரை தமிழ் இசை சங்கத்தில் ஆண்டு தோறும் 10 தினங்கள் தமிழ் இசை விழா நடத்தி வருகிறது. பத்து தினங்களும் தினமும் இசை, பரதம், வீணை, புல்லாங்குழல்,நாதஸ்வரம் ,நாடகம், பட்டிமன்றம், இயல், இசை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளை மதுரை வாழ் இசை ஆர்வமிக்கவருக்கு வழங்கி வருகிறது.தமிழ் இசை விழாவில் பத்து தினங்களும் வளரும் இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களையும் ஊக்குவித்து வருகின்றது.விழாவில் தமிழ் இசையில் வளர்ந்து வரும் கலைஞர் மூவரைத் தேர்ந்தெடுத்து இருவருக்கு எலெக்ட்ரானிக் தம்புரா பரிசும், ஒருவருக்கு வெள்ளித்தட்டும் பரிசாக வழங்கி வருகின்றது. மேலும் ஓதுவா மூர்த்திகளை கெளரவிக்கின்ற விதமாக சிறந்த தேவார ஆசிரியர், ஒருவரையும், சிறந்த தேவார மாணவர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூபாய் 1000/-மும், வெள்ளிப் பதக்கமும் வழங்கி கெளரவித்து வருகின்றது. ஆண்டு தோறும் இசை விழா அன்று ஆண்டு விழா மலரும் தயாரித்து சிறப்பாக வெளியிட்டு வருகிறது. மூன்று தலைமுறைகளுக்கு மேல் தமிழ் இசை வளர்ச்சியில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டு செவ்வனே பணியாற்றி வரும் அரச குடும்பத்தினர் தமிழுக்கும், தமிழ் இசைக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்றவும் மதுரை தமிழ் இசைச் சங்கம் தமிழுக்கும், தமிழ் இசைக்கும் சிறப்பார்ந்த பணியாற்றவும் ராஜா முத்தையா மன்றம் வெற்றியுடன் விளங்கவும் ,அரச குடும்பத்தினரின் நற்பணி ஆல் போல் தழைத்து வளர்ந்தோங்க அருள்மிகு அய்யப்பனையும், நடராஜப் பெருமானையும் ,அருள்மிகு அங்கயற்கண்ணி ஆலவாய் அண்ணலையும் அடி பணிந்து வணங்கி வேண்டுவோமாக.